அமலாக்கத்துறை விசாரணையை செந்தில் பாலாஜி தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் -டி.டி.வி.தினகரன் பேட்டி
|அமலாக்கத்துறை விசாரணையை செந்தில் பாலாஜி தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
சென்னை,
அ.ம.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் தி.மு.க. அரசை கண்டித்து தெருமுனை கூட்டங்கள் நடத்துவது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தைரியமாக...
செந்தில் பாலாஜி என்னுடைய பழைய நண்பர். அ.ம.மு.க.வில் என்னுடன் 2 ஆண்டுகள் பணியாற்றியவர். அவருக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டு இருப்பது வருத்தமாக இருக்கிறது. அதே நேரத்தில் அவர் இதையெல்லாம் (அமலாக்கத்துறை கைது நடவடிக்கை) தைரியமாகதான் எதிர்கொள்ள வேண்டும்.
அன்று செந்தில்பாலாஜிக்கு மட்டும் நெஞ்சுவலி வரவில்லை. தி.மு.க.வினருக்கே நெஞ்சுவலி வந்திருக்கும். இது அவர்களுக்கு தலைவலியான விஷயம்.
பழி வாங்கும் நடவடிக்கை இல்லை
அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தால் சென்றுதான் ஆக வேண்டும். என்னையும்தான் 3 முறை விசாரணைக்கு டெல்லிக்கு அழைத்து சென்றனர். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை.
சுப்ரீம்கோர்ட்டு பரிந்துரையின் பேரில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் அமலாக்கத்துறையை எதிர்த்துவிட்டு அப்புறம் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்டும்.
நானும், ஓ.பன்னீர்செல்வமும் விரைவில் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச உள்ளோம்.
விஜய் கருத்து சரிதான்
பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய், பணம் வாங்கிவிட்டு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்லி இருப்பது சரியான கருத்துதான். தேர்தல் நேரத்தில் இதே கருத்தைதான் நடிகர்-நடிகைகளை வைத்து சொல்ல வைக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் சண்முகவேலு, பொருளாளர் எஸ்.கே.செல்வம், மகளிரணி செயலாளர் வளர்மதி ஜெபராஜ், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்பட நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.