< Back
மாநில செய்திகள்
செந்தில் பாலாஜி விவகாரம்: கவர்னர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்..!
மாநில செய்திகள்

செந்தில் பாலாஜி விவகாரம்: கவர்னர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்..!

தினத்தந்தி
|
30 Jun 2023 9:15 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகர் முழுவதும் இரவோடு இரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை, அண்ணாசாலை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் "கிண்டிக்கு ஒரு கேள்வி...? கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்த உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகளை மத்திய பாஜக அரசில் உள்ள 34/77... 44% அமைச்சர்களை பதவியில் இருந்து விலக்ச் சொல்லி டெல்லிக்கு கடிதம் எழுதுவீங்களா கிண்டி...? என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் மத்திய மந்திரிகள் சிலரின் பெயர் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்