செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை - அமலாக்கத்துறை வாதம்
|செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை,
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் 2-வது நாளாக விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார்.
அதில் "சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிடிலும் புலன் விசாரணை செய்வது கடமை. குற்றத்தை கண்டுபிடிக்க, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்வது, சோதனை செய்வது, வழக்கு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது அமலாக்கத்துறையின் கடமையை மறுப்பதாகும்.
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம் தான். ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது. புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது
எந்த அழுத்தத்துக்கும் அமலாக்கத்துறை உட்படுவதில்லை. தவறாக கைது நடவடிக்கை எடுத்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளையே கைது செய்ய விதி உள்ளது. அப்பாவிகள் கைது செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்ய இந்த கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை என்று வாதிட்டு வருகிறார்.