< Back
மாநில செய்திகள்
செந்தில் பாலாஜி வழக்கு:  3-வது நீதிபதி நாளை பிற்பகல் விசாரணை
மாநில செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு: 3-வது நீதிபதி நாளை பிற்பகல் விசாரணை

தினத்தந்தி
|
5 July 2023 6:56 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக 3-வது நீதிபதி நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்க உள்ளார்.

சென்னை,

அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பாரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று அவர்கள் இருவரும் பிறப்பித்தனர். அப்போது நீதிபதி இருவரும் மாறுபட்ட நிலைபாட்டை எடுத்தனர்.நீதிபதி ஜெ.நிஷா பானு, அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம். அவரை உடனே கோர்ட்டு காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார்.

ஆனால் நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, "செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. அவர் 10 நாட்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற வேண்டும்" என்று கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து இந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட தலைமை நீதிபதிக்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர்.இதன் அடிப்படையில் தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி சி.வி. கார்த்திகேயனை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை நீதிபதி சி.வி கார்த்திகேயன் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்