< Back
மாநில செய்திகள்
செந்தில் பாலாஜி விவகாரம்; எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதிக்க அமலாக்க துறை மனு
மாநில செய்திகள்

செந்தில் பாலாஜி விவகாரம்; எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதிக்க அமலாக்க துறை மனு

தினத்தந்தி
|
15 Jun 2023 1:32 PM IST

செந்தில் பாலாஜி விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்க துறை மனு தாக்கல் செய்து உள்ளது.

சென்னை,

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் கடந்த 13-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்தது. 17 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது.

இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதங்களை முன்வைத்தபோது அவர், செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்த குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தமிழக மருத்துவ குழு அறிக்கையில் நம்பிக்கையில்லை என அமலாக்க துறை வாதம் செய்திருந்தது. இது தொடர்பாக புதிய மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் தொடர்பான மனுக்களுடன் இந்த மனுவும் விசாரிக்கப்பட கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால், செந்தில் பாலாஜி விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்க துறை தாக்கல் செய்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும் செய்திகள்