சென்னை
திருவொற்றியூரில் பரபரப்பு சம்பவம்: கடலில் மூழ்கிய கல்லூரி மாணவ-மாணவிகளை வலை, கயிறுகளை வீசி மீட்ட மீனவர்கள்
|திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி தவித்த கல்லூரி மாணவ-மாணவிகள் 4 பேரை வலை மற்றும் கயிறுகளை வீசி மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
திருவொற்றியூர், எண்ணூர் கடல் பகுதி மிகவும் ஆழமானது என்பதாலும், கூர்மையான கருங்கற்கள் அதிகம் இருப்பதாலும் இந்த பகுதியில் பொதுமக்கள் குளிக்க போலீசார் தடை விதித்து உள்ளனர். திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் கடற்கரை பகுதியில் மாலை நேரங்களில் அதை சுற்றி உள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு வந்து பொழுதை கழித்து செல்வது வழக்கம்.
விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை சென்னை போரூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மொத்தம் 6 பேர் காரில் திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் கடற்கரை பகுதிக்கு வந்தனர்.
அவர்கள் கரையோரத்தில் கற்கள் குவிக்கப்பட்டு உள்ள இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு, செல்போனில் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் கடலில் இறங்கி குளித்தனர்.
அப்போது ராட்சத அலை மாணவ-மாணவிகளை கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதில் 2 பேர் மட்டும் கரைக்கு தப்பி வந்தனர். மற்ற 4 பேரும் அலையில் சிக்கிக்கொண்டனர். அவர்களை கரைக்கு வந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அலையின் சீற்றத்தால் மாணவ-மாணவிகள் 4 பேரும் தண்ணீரில் சிக்கி தத்தளித்தனர். அவர்களால் நீந்தி கரைக்கு வரமுடியவில்லை.
கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்க தொடங்கினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கரையில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு கடல் மணலில் அமர்ந்து வலை பின்னிக் கொண்டிருந்த பலகை தொட்டிகுப்பத்தைச் சேர்ந்த தேசப்பன், கோபி, வசந்த் உள்ளிட்ட மீனவர்கள் அங்கு திரண்டு வந்தனர்.
அலையின் வேகம் அதிகமாக இருந்ததாலும், கற்கள் அதிகம் கொட்டப்பட்டு அதில் பாசி இருந்ததாலும் மீன்வர்களால் கடலுக்குள் இறங்க முடியவில்லை.
இதையடுத்து வலைகள் மற்றும் கயிறுகளை கடலுக்குள் வீசி தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்க முயன்றனர். இதிலும் சிரமம் ஏற்பட்டது.
அலையின் வேகத்தால் கயிறுகளை கடலில் சிக்கிய மாணவ-மாணவிகள் அருகில் வீசமுடியவில்லை. நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு கடலில் மூழ்கிய மாணவ-மாணவிகள் 4 பேரையும் மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
அவர்கள் ஆபத்தான நேரத்தில் உதவிய மீனவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மாணவ-மாணவிகள் அனைவரும் அவர்களது குடும்பத்தினருக்கு தெரியாமல் கடற்கரைக்கு வந்திருப்பது தெரிந்தது. அவர்களுக்கு மீனவர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
கடலில் மூழ்கிய மாணவ-மாணவிகளை மீனவர்கள் வலை, கயிறுகளை வீசி மீட்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து எண்ணூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.