மதுரை
மதுரை அஷ்வத்தா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய மூத்த விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
|மதுரை அஷ்வத்தா பள்ளியில் மாணவர்களுடன் மூத்த விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கலந்துரையாடினார்.
மதுரை பொன்மேனி அருகே உள்ள தானத்துவம் பகுதியில் செயல்பட்டு வரும் அஷ்வத்தா பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி முதல்வர் ராஜீ தலைமை தாங்கினார். தாளாளர் மணிவண்ணன் வரவேற்றார். நிர்வாக இயக்குனர்கள் ரவீந்திரன், லட்சுமி ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மூத்த விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கலந்து கொண்டு, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். பின்னர் சிவதாணுபிள்ளை பேசியதாவது:- மாணவர்கள் எப்போதும் எதையாவது யோசித்து கொண்டிருக்க வேண்டும். புதிதாக யோசிக்கும்போது புதிய சிந்தனைகள் வரும். அதன் மூலம் பல சாதனைகளை செய்ய முடியும். அப்போதுதான் நம்முடைய கனவு நனவாகும். ஒவ்வொரு நாளையும் நாம் கடந்து செல்லும்போது எதையாவது ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம். ஆனால், கல்வி அப்படி கிடையாது. கல்விதான் எப்போதும் முக்கியம். எண்ணங்களை எப்போதும் பெரிதாக கொள்ள வேண்டும். உலகில் உள்ளவர்களின் மூளைகளை ஒப்பிடும்போது இந்தியர்களின் மூளை சிறந்ததாக இருக்கிறது. அதனை சரிவர பயன்படுத்தி, அறிவியல் வளர்ச்சிக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். தோல்விகள் வந்தாலும் அதில் இருந்து எழுந்து வெற்றியை நோக்கி பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், அறிவியல் கண்காட்சியில் பெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிவதாணு பிள்ளை பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மதுரை கல்லூரியின் முதல்வர் சுரேஷ், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.