< Back
மாநில செய்திகள்
சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் கோவில் பங்குனி தேரோட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் கோவில் பங்குனி தேரோட்டம்

தினத்தந்தி
|
4 April 2023 6:24 PM GMT

சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

பாலசுப்பிரமணியர் கோவில்

கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி நகரம் செயற்கை குன்றின் மேல் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா 12 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் அன்னதானம் வழங்கப்படுவதுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலாவும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து சென்றனர்.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி பிரமாண்ட வைரத்தேர் காய், கனி, பூ தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி வீற்றிருக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். நான்கு வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் ஆரவாரம் செய்ய மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர். பல்வேறு இடங்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். தச்சர்கள் தேர்சக்கரங்களை கட்டைகள் வைத்து லாவகமாக திருப்பி சென்று புறப்பட்ட இடத்திலேயே நிலை நிறுத்தினார்கள். தேர் நிலைநின்றதும் தீபாராதனை காட்டப்பட்டபோது பக்தர்கள் உற்சாகத்துடன் கைத்தட்டி ஆரவாரம் செய்து குலவையிட்டனர். பக்தர்களுக்காக பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்திருந்தனர். மருத்துவ முகாம், தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் இருந்தது.

பால்குட ஊர்வலம்

வடகாடு தோழன்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதியுலா நடைபெற்றது. நேற்று வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து சென்று பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்