< Back
மாநில செய்திகள்
12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைப்பு..!
மாநில செய்திகள்

12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைப்பு..!

தினத்தந்தி
|
24 April 2023 12:56 PM IST

12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க., பா.ஜ.க.வும் தங்கள் தரப்பு எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் இதை கண்டித்து முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் இந்த சம்பவம் பற்ற வைத்தது.

இந்நிலையில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழிலாளர் திருத்த மசோதா உள்ளிட்ட 17 மசோதாக்கள் சட்டத்துறைக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நிறைவேறிய மசோதாக்களை கவர்னருக்கு அனுப்பும் முன் திரும்பப் பெறும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது.

12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினர் கருத்துகளை அறியவும் அரசு சார்பில் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்கின்றனர்.

மேலும் செய்திகள்