அரியலூர்
வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிப்பது குறித்து கருத்தரங்கம்
|வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிப்பது குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு பரப்ரம்மம் பவுண்டேஷன் மற்றும் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் நகராட்சி ஆணையர் குமார் அறிவுறுத்தலின்படி நகராட்சி மேலாளர் அன்புசெல்வி காய்கறி கழிவு, பழத்தோல், பூக்கழிவுகள், முட்டை ஓடு, காய்ந்த ஓடுகள் ஆகியவற்றைக்கொண்டு வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கலாம், மக்கும் குப்பை வகைகள், மக்காத குப்பை வகைகள், அபாயகரமான குப்பை வகைகள், சுகாதார கழிவுகள் போன்றவற்றை வீட்டிலேயே பிரித்து வைத்து தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து கொடுக்க வேண்டும். நகர தூய்மைக்கு பங்களிக்க வேண்டும் என்று கூறி, தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். செவிலியர் மாணவிகள், களப்பணி உதவியாளர் விஜயகுமார், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் ரமேஷ், மணிகண்டன், உமாதேவி, கலையரசி, ரேகா, ஜோதி, அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி முதல்வர் சுருதி நன்றி கூறினார்.