தர்மபுரி
பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில்மாரடைப்பு, பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
|பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது? நோய் வருவதற்கான அறிகுறிகள் மற்றும் நோய்வந்த பின்பு அதனை குணப்படுத்துவதற்கான வழிமுறைகள், நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
கருத்தரங்கில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர் கண்ணன், நரம்பியல் சிகிச்சை நிபுணர் வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பேசினர்.
இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் பாலக்கோடு அரசு மருத்துவமனையின் தலைமை டாக்டர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.