ராமநாதபுரம்
மாற்றுத்திறனாளிகள் நல சங்க கருத்தரங்கம்
|திருவாடானையில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருவாடானை,
திருவாடானையில் டிசம்பர் 3 இயக்க மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் கருத்தரங்கம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. ஒன்றிய தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராவுத்தர் மைதீன் வரவேற்றார். மாநில தலைவர் வேலாயுதம் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் 5 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக வழங்கிட வேண்டும். வேலைவாய்ப்பில் 4 சதவீதம் அரசு மற்றும் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். திருவாடானை தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு தனிவட்டாட்சியர் அலுவலகத்தை கீழ் தளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தையும் கீழ்தளத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் செய்வதற்கு வங்கி கடன் வழங்குவதற்கு எந்தவித அலைக்கழிப்பும் இல்லாமல் எளிதில் அணுகும் வகையில் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானையில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட, ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.