சிவகங்கை
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
|எஸ்.புதூர் அருகே மேலவண்ணாரிருப்பு கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
எஸ்.புதூர் அருகே மேலவண்ணாரிருப்பு கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
சிறப்பு யாக வேள்வி
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே மேலவண்ணாரிருப்பு கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த மேலவண்ணாரிருப்பு, வெள்ளிக்குன்றம்பட்டி, கீழவண்ணாரிருப்பு ஆகிய கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்தன.
இதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கடந்த 29-ந்தேதி காலை மங்கள இசை, திருமறை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, வாஸ்து சாந்தி, திக் பந்தனம், பிரவேச பலி, முதற்கால யாகசாலை பூஜை, சாமி ஆவாகனம், வேத பாராயணம், மூல மந்திர ஹோமம் நடைபெற்றது. இரவில் பூர்ணாகுதி, தீபாராதனை, சதுர்வேதம், ஆசீர்வாதம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
இதை தொடர்ந்து நேற்று காலை கணபதி பூஜை, புண்ணியாக வாகனம், மண்டப சாந்தி, பிம்ப சுத்தி, கோபூஜை, லட்சுமி பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், திரவியாகுதி, மூலமந்திர ஹோமம், நாடி சந்தனம், மகா பூர்ணாகுதி நடைபெற்றது.
இதை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் இசைக்க புனித நீர் குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோவிலை வலம் வந்து கருட பகவான் வானில் வட்டமிட கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இதை தொடர்ந்து கோவில் கோபுர கலசங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை மேலவண்ணாரிருப்பு, வெள்ளிக்குன்றம்பட்டி, கீழவண்ணாரிருப்பு ஆகிய 3 கிராம மக்கள் செய்திருந்தனர்.