விழுப்புரம்
செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
|சாணாந்தோப்பு செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் மதுரா சாணாந்தோப்பு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்வ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல்கால யாக பூஜை, ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, தத்துவார்ச்சனை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி, தீபாராதனையும் நடந்தது.
இதனை தொடர்ந்து காலை 9.30 மணியளவில் யாக சாலையில் மேள, தாளம் முழங்க கடம் புறப்பாடாகி கோவிலின் விமான கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு அம்மன் வீதிஉலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை சாணாந்தோப்பு கிராம மக்கள் செய்திருந்தனர்.