ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட பதிவை நீக்கினார் செல்லூர் ராஜூ
|செல்லூர் ராஜூவின் எக்ஸ் தளப்பதிவு அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படும் என்று பரவும் தகவல் தவறானது என அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அ.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை என்று கூறி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில், இனி எப்போதும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் சேர்க்கவே மாட்டோம் என்று தெரிவித்ததும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, ராகுல்காந்தி ஒரு ஓட்டலில் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதனுடன் `நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி' என்றும் எழுதி இருந்தார். இந்த வீடியோவுடன் கூடிய கருத்து சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. நேற்று ராஜீவ்காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த சமயத்தில் வெளியான செல்லூர் ராஜூவின் கருத்து, எக்ஸ் தள உறுப்பினர்களிடையேயும், அ.தி.மு.க.வினரிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற தேர்தலின் தற்போதைய நிலையை அறிந்து காங்கிரஸ் கட்சியை அ.தி.மு.க. ஆதரிக்க தொடங்கி விட்டதோ என்று கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை தெரிவித்தனர். இதுதொடர்பாக செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ராகுல்காந்தியின் எளிமையை பாராட்டும் வகையில்தான் இந்த பதிவை வெளியிட்டேன். எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்றார். அவருடைய இந்த பதிவானது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ராகுல் காந்தியை புகழ்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்ட பதிவு அரசியல் களத்தில் சர்ச்சையை எற்படுத்திய நிலையில் தனது பதிவை அவர் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கியுள்ளார். அதிமுக தலைமை கொடுத்த அழுத்தத்தால் ராகுல் காந்தி குறித்த பதிவை செல்லூர் ராஜூ நீக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.