திருவாரூர்
திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் ரூ.95-க்கு தக்காளி விற்பனை
|திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் ரூ.95-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படியும், திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ வழிகாட்டுதல்படியும், திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின்படியும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் டான்ஹோடா விற்பனை நிலையம் மூலம் மன்னார்குடி மற்றும் திருவாரூர் வட்டார உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி நேற்று திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனை நிலையம் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இதனை திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் நேரில் ஆய்வு செய்தார். நேற்று வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.125-க்கு விற்ற நிலையில் திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை பொதுமக்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் வழங்கி தொடங்கி வைத்து பேசுகையில், வரும் நாட்களில் இன்னும் குறைந்த விலையில் தக்காளி விற்பனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதில் திருத்துறைப்பூண்டி தோட்டக்கலை அலுவலர் சூரியா, உதவி தோட்டக்கலை அலுவலர் புலவேந்திரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் (விற்பனை) சக்திவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.