விழுப்புரம்
ரேஷன் கடைகள் மூலம் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை
|விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் கடந்த 1½ மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள், தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும் ஜூன் மாத இறுதியில் வெளிச்சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை உயர்ந்தது.
இதையடுத்து தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை கூட்டுறவுத்துறை மூலம் மேற்கொண்டது. இந்த நிலையில் தற்போது விலை மேலும் உயர்ந்து கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி வரத்து தொடர்ந்து குறைவாகவே இருந்து வருவதால் விலையும் குறையவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதைதவிர்க்க தமிழகம் முழுவதும் நேற்று முதல் கூட்டுறவுத்துறை சார்பில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்ற விலையில் விற்பனை தொடங்கியுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது. இதற்காக வந்தவாசியில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து 500 கிலோ தக்காளியை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கொள்முதல் செய்தனர்.
ரூ.60-க்கு விற்பனை
இவற்றை விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளான திண்டிவனம் வகாப் நகர், மன்னார்சாமி கோவில் தெரு, ஜெயபுரம், நல்லியகோடன் நகர், கிடங்கல்-1, பிள்ளையார் கோவில் தெரு, மசூதி தெரு கடைகள் என மொத்தம் 20 ரேஷன் கடைகளுக்கு தலா 25 கிலோ தக்காளி வீதம் அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இவை கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில் தக்காளி அதிகம் வராததால் ஒரு நபருக்கு ½ கிலோ என்ற அளவில்தான் விற்பனை செய்யப்பட்டன. ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுவதை அறிந்த பொதுமக்கள் அங்கு போட்டி போட்டுக்கொண்டு சென்று வாங்கினர். இதனால் விற்பனை தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே தக்காளி விற்றுத்தீர்ந்தது.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், நாளை (இன்று) முதல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலமும் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். தக்காளி வரத்து அதிகரித்து விலை சீராகும் வரை ரேஷன் கடைகள் மூலம் தொடர்ந்து தக்காளி விற்பனை செய்யப்படும் என்றனர்.