கன்னியாகுமரி
மலைபோல் குவித்து வைக்கப்பட்ட மீன்கள் விற்பனை
|ஆழ்கடலுக்கு சென்ற 58 விசைப்படகுகள் கரை திரும்பியதால் குளச்சலில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.
குளச்சல்,
ஆழ்கடலுக்கு சென்ற 58 விசைப்படகுகள் கரை திரும்பியதால் குளச்சலில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.
படகுகள் கரை திரும்பின
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குளச்சல் கடல் பகுதியில் ஆகஸ்டு மாதத்தின் தொடக்கத்தில் பலத்த காற்று வீசியதால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை, காற்று ஓய்ந்த நிலையில் விசைப்படகுகள் மற்றும் பைபர் வள்ளங்களில் மீனவர்கள் மீண்டும் கடந்த 2 வாரமாக மீன்பிடிக்க செல்கிறார்கள்.
இந்தநிலையில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 58 படகுகள் நேற்று கரை திரும்பின. இவற்றில் நாள் ஒன்றுக்கு 20 டோக்கன்கள் முறையில் விசைப்படகுகளில் இருந்த மீன்கள் இறக்கப்பட்டன.
மலைபோல் மீன்கள் குவிப்பு
அந்த வகையில் விசைப்படகு மீனவர்களின் வலையில் கிளி மீன்கள், நாக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் அதிகமாக சிக்கியிருந்தன. அந்த மீன்கள் குளச்சல் மீன் ஏலக்கூடத்தில் மலைபோல் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு பெட்டி கிளி மீன்கள் ரூ.3,500-க்கு விலை போனது. இது முந்தைய விலையை விட ரூ.1,500 குறைவு. இதேபோல் கிலோ ரூ.38-க்கு விற்பனையான நாக்கண்டம் மீன் நேற்று கிலோ ரூ.32-க்கு விற்றது. மேலும் ரூ.400-க்கு விற்ற தோட்டு கணவாய் ரூ.320-க்கும், ரூ.320-க்கு விற்ற ஓலக்கணவாய் ரூ.240-க்கும் விற்றது.
கிளி மீன்கள் பற்பசை தயாரிப்பதற்கும், நாக்கண்டம் மீன்கள் கோழி தீவனம் தயாரிப்பதற்கும் பயன்படுவதால் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். மீன்கள் அதிகம் கிடைத்தும் குறைவான விலைக்கே விற்பனையானதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.