< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை

தினத்தந்தி
|
1 March 2023 12:35 AM IST

பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை சாத்தியம் ஆகுமா என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆவின் நிறுவனம் ஆரம்பித்த காலத்தில் முதலில் பாட்டில்கள் மூலமே பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது.

தற்போது ஆவின் நிறுவனம் கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட பாலை ஆரஞ்சு நிற பாக்கெட்டிலும், நிலைப்படுத்தப்பட்ட பாலை பச்சை நிற பாக்கெட்டிலும், சமன்படுத்தப்பட்ட பாலை நீல நிற பாக்கெட்டிலும், இரு முறை கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பாலை மெஜந்தா நிற பாக்கெட்டிலும் தரம் பிரித்து, விற்பனை செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு தமிழ்நாடு முழுவதும் 27 ஒன்றியங்கள் மூலமாக 29 லட்சம் லிட்டர் பாலை, ¼, ½, 1 லிட்டர்களில் 63 லட்சம் பாக்கெட்டுகளை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

ஐகோர்ட்டு யோசனை

பால் பாக்கெட்டுகளை பயன்படுத்திவிட்டு, மீண்டும் திருப்பி ஒப்படைத்தால் ஒரு பாக்கெட்டுக்கு 10 பைசா வழங்கும் திட்டமும் ஆவின் அறிவித்திருந்தது. தற்போது அந்த நடைமுறை மருவிப்போய்விட்டது.

இதனால் அன்றாடம் பயன்படுத்தும் 63 லட்சம் ஆவின் பால் பாக்கெட்டுகள் பயன்படுத்திய பிறகு, குப்பை மேட்டுக்கு வந்துவிடுகின்றன. இவ்வாறாக சேரும் பிளாஸ்டிக்கவர்கள் பெரிய சீரழிவை பிற்காலத்தில் தரக்கூடியது. ஏற்கனவே பிளாஸ்டிக்பயன்பாட்டை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணையில், சென்னை ஐகோர்ட்டு ஒரு யோசனையை தெரிவித்திருந்தது.

கண்ணாடி பாட்டிலில்...

ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக, கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது பற்றி ஆராயும்படி, அரசு தரப்பு வக்கீலுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்கள்.

மேலும் முதற்கட்டமாக ஏதேனும் ஒரு மாநகராட்சி அல்லது ஒரு பகுதியை தேர்வு செய்து அங்கு சோதனை அடிப்படையில் கண்ணாடி பாட்டில்களில் ஆவின் பாலை விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையிடமும், ஆவின் நிறுவனத்திடமும் கருத்துகளை கேட்பதாக, அரசு தரப்பு வக்கீல் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இந்த விசாரணை மீண்டும் வருகிற 8-ந்தேதி வர இருக்கிறது.

சென்னை ஐகோர்ட்டு கூறியிருக்கும் இந்த யோசனை சாத்தியப்படுமா? என்பது பற்றி பொது மக்களிடமும், பால் முகவர்கள், வியாபாரியிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

வரவேற்பு

ஆர்.ஆர்.நகர் ஆவின் பால் விற்பனையாளர் பாலமுருகன்:-

தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் கேனில் பால் வினியோகம் செய்து வருகிறது. கடந்த காலங்களில் ஆவின் நிறுவனம் திருமணம் போன்ற வைபவங்களுக்கு 40 லிட்டர் கேனில் பால் வினியோகம் செய்து வந்தது. தற்போது அனைத்துமே பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் பொதுமக்கள் கேனில் பால் வினியோகம் செய்தால் அதை வரவேற்பார்கள். ஆனால் ஆவின் நிறுவனம் பாலின் விற்பனை விலையை கூட்ட வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் தற்போது தனியார் பால் விலை லிட்டர் ரூ.72-க்கு விற்பனை செய்யப்படும். ஆவின் பால் லிட்டர் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பால் விலை உயர்வு என்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கும்போது அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் ஆவின் நிறுவனம் இதற்கு தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டாலும் பொதுமக்களின் நலன்கருதி ஆவின் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கலாம்.

மாற்று ஏற்பாடு

அருப்புக்கோட்டை அன்பு நகரை சேர்ந்த முனீஸ்வரி:-

ஆவினில் தற்போது பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வினியோகம் செய்யப்படுகிறது. ஆரம்ப கால கட்டத்தில் பெரிய கேன்களில் பால் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆவினில் பிளாஸ்டிக்பாக்கெட்டுகளில் பால் வழங்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் பெரும்பாலும் கழிவுநீர் கால்வாயில் வீசப்படுகின்றன. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்று ஏற்பாட்டை ஆவின் நிர்வாகம் செய்ய வேண்டும்.

பிரச்சினைகள்

சுந்தரபாண்டியத்தை சேர்ந்த இல்லத்தரசி லீலா:-

ஆவின் பால் பல ஆண்டுகளுக்கு முன்பு பாட்டிலில் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது பிளாஸ்டிக் பைகள் மூலமாக வினியோகம் செய்யப்படுகிறது. தமிழக அரசு பாலித்தீன் பைகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் அரசின் மூலம் வினியோகிக்கப்படும் பாலானது பிளாஸ்டிக்பைகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் பல்வேறு உடல் பிரச்சினைகள் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. எனவே அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு பாட்டில்கள் மூலம் வினியோகிக்கப்பட்டு வந்தது போல மீண்டும் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உபாதைகள்

ராஜபாளையம் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி முத்தமிழ்செல்வி கூறியதாவது:-

ஆவின் தற்போது பாலிைன பிளாஸ்டிக்பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வருகின்றனா். இதனால் பல்ேவறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்த்து பழைய முறையில் கேன்களில் அடைத்த விற்பனை செய்யலாம். இதனால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எந்தவித உபாதைகள் இல்லாமல் இருக்கும்.

சாத்தியப்படாது

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலசங்கத் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், 'ஆவின் பாலை பாக்கெட்டில் இருந்து பாட்டிலுக்கு மாற்றுவது என்பது சாத்தியப்படாது. அதற்கு ஏற்றாற்போல், மிஷின், கட்டமைப்புகளை மாற்ற வேண்டும். வினியோகம் செய்வதற்கான நடைமுறையும் மொத்தமாக மாறிவிடும். பாட்டில் என்பதால், சேதாரமும் அதிகமாக இருக்கும். இதனால் பாலின் விலையும் உயரும்.

மீண்டும் அதே பாட்டிலை சுழற்சி முறையில் பயன்படுத்தும் நடைமுறை கொண்டுவரப்பட்டாலும், அதற்கான ஆட்கள் தேவை உயருவதோடு, கழுவி பயன்படுத்துவது சுகாதாரமாக இருக்குமா? என்பது கேள்விக்குறிதான். அதேப்போல், பால் முகவர்கள் வாங்கி இருப்பு வைப்பதிலும் சிரமம் ஏற்படும். குளிர்சாதன பெட்டியின் தேவையும், மின்சார கட்டணமும் அதிகரிக்கும். வியாபாரிகளும் இருப்பு வைத்து விற்கமாட்டார்கள். இதனால் நுகர்வோர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பால் வினியோகம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போய்விடும்'.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்