< Back
மாநில செய்திகள்
வாகனங்களில் வைத்து மீன்களை விற்கும் அவலம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

வாகனங்களில் வைத்து மீன்களை விற்கும் அவலம்

தினத்தந்தி
|
21 Nov 2022 1:15 AM IST

வாகனங்களில் வைத்து மீன்களை விற்கும் அவலம்

தஞ்சை கீழவாசல் மீன்மார்க்கெட்டில் கடைகள் இடிக்கப்பட்டு 8 மாதம் ஆகியும் புதியகடைகள் கட்டப்படவில்லை. வியாபாரிகள் வாகனங்களில் வைத்து மீன்களை விற்பனை செய்து வருகிறார்கள். எனவே புதிய கடைகள் விரைவாக கட்டித்தர வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மீன்மார்க்கெட்

தஞ்சை கீழவாசலில் மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. காவிரி டெல்டாவின் முக்கிய மீன் சந்தையான இந்த மீன்மார்க்கெட்டுக்கு நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேசுவரம், சென்னை மற்றும் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கடல் மற்றும் உள்நாட்டு மீன் வகைகள் வருகின்றன. கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து, தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் உயிர் கெண்டை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கும் மீன்கள் அனுப்பப்படுகின்றன. கீழவாசல் சரபோஜி சந்தையின் ஒரு பகுதியில் முதலில் மீன்மார்க்கெட் செயல்பட்டது. ஆனால் இந்த மீன் சந்தை, இடப்பற்றாக்குறை, துர்நாற்றம், சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களுக்காக இடம் மாற்ற முடிவு செய்து, சற்றுத் தொலைவில் உள்ள ராவுத்தாபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 2001-ல் புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட்டது.

7 ஆண்டாக மூடிக்கிடந்தது

ஆனால் இங்கு முறையாக வியாபாரம் இருக்காது என கூறி வியாபாரிகள் முதலில் மறுத்தனர். இதனால் கட்டிடம் கட்டப்பட்டு 7 ஆண்டுகளாக மார்க்கெட் மூடியே கிடந்தது. எல்லா வசதிகளையும் செய்து தருவதாகவும், சுத்தம், சுகாதாரம் பாதுகாக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம், உறுதியளித்ததை அடுத்து 2008-ல் வியாபாரிகள் புதிய மீன் சந்தைக்கு இடம் மாறினர்.

அதன்படி புதிய மீன்மார்க்கெட்டில் 56 சில்லறை விற்பனை கடைகளும், மொத்த (ஏல) வியாபாரிகளும், ஏற்றுமதியாளர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மீன் வெட்டும் தொழிலாளர்கள் செயல்பட்டு வந்தனர். அதிகாலை 3 மணி முதல் மதியம் 2 மணி வரை மீன்மார்க்கெட் செயல்பட்டு வந்தது.

கடைகள் இடிப்பு

இங்கு தற்போது தினமும் 8 முதல் 10 டன் மீன்கள் விற்பனைக்கு வரும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை காலங்களில் 20 முதல் 30 டன் வரை மீன்கள் விற்பனைக்கு வரும். கொரோனா காலக்கட்டத்தில் மீன்சந்தை மூடப்பட்டு கரந்தையில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்திலும், பின்னர் பட்டுக்கோட்டை பைாபஸ் சாலை பகுதியிலும் இங்கியது. அதன் பின்னர் மீன் மொத்த வியாபாரம் கீழவாசல் பகுதியிலும், சில்லறை விற்பனை வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகேயும் இடமாற்றப்பட்டது.

மேலும் மீன் மார்க்கெட்டில் புதிதாக கடைகள், விற்பனை பகுதி, மீன்வெட்டும் இடத்தில் இருக்கும் வகையில் புதிதாக கட்டுவதாக மாநகராட்சி அறிவித்து பழைய கடைகளை இடிக்க முடிவு செய்தது. அதன்படி மீன்மார்க்கெட்டில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டு 8 மாதம் ஆகி விட்டது. ஆனால் புதிதாக கடைகள் கட்டுவதற்கான எந்த பணிகளும் இன்னும் தொடங்கப்படவில்லை.

லாரி டிரக்குகளில் வைத்து விற்பனை

தற்போது சில்லறை மீன்விற்பனை வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே நடந்து வந்தாலும், மொத்த விற்பனை கீழவாசல் பகுதியில் மீன்மார்க்கெட் இருந்த இடத்தின் அருகே நடைபெற்று வருகிறது. அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை இங்கு விற்பனை நடைபெறுகிறது. ஆனால் இங்கு தற்போது மொத்த வியாபாரிகள் அனைவரும் லாரி டிரக்குகளில் வைத்து மீன்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

இதற்காக பழைய டிரக்குகளை வாங்கி வைத்துள்ளனர். சில மொத்த வியாபாரிகள், லாரி டிரக்குகளை அப்படியே வைத்து விற்பனை செய்யும் நிலை தான் காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

கடைகள் கட்டுவது எப்போது?

இது குறித்து மீன் மொத்த வியாபாரிகள் கூறுகையில், புதிதாக கடைகள் கட்டித்தருவதாக கூறி ஏற்கனவே இருந்த கடைகளை இடித்தனர். தற்போது மீன் மொத்த வியாபாரிகள் 45 பேர் இருந்தாலும் தினமும் 25 பேர்வரை வியாபாரம் செய்து வருகிறார்கள். அனைவரும் லாரி டிரக்குகளையே பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தற்போது வியாபாரம் நடைபெறும் இடத்தில் மின்சார வசதி இல்லை. இதனால் ஜெனரேட்டர், பேட்டரி போன்றவற்றை பயன்படுத்தி தான் வியாபாரம் செய்து வருகிறோம். தண்ணீர் வசதியும் இல்லை.

இதே போல் தற்காலிக மீன்மார்க்கெட்டிலும் எந்த வித அடிப்படை வசதியும் இல்லை. மீன்கள் விற்பனை செய்தது போக மீதமுள்ளவற்றை டிரக்குகளில் பதப்படுத்தி பாதுகாப்பாக பூட்டி விட்டு செல்கிறோம். கடைகள் இடித்த இடத்தில் புதிய மீன்மார்க்கெட் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இன்னும் எந்த பணியும் தொடங்கப்படாததால் மீன்மார்க்கெட் பகுதி புதர்கள் நிறைந்து காணப்படுகிறது.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, புதிய மீன்மார்க்கெட் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்வதோடு, மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம், மீன்வெட்டும் இடம் அனைத்தும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்