கடலூர்
அங்கன்வாடியில் இருந்து ஓட்டலுக்கு முட்டைகள் விற்பனை
|அங்கன்வாடியில் இருந்து ஓட்டலுக்கு முட்டைகள் விற்பனை செய்த 2 பெண் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அங்கன்வாடி முட்டைகள் விற்பனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரசின் முத்திரையிடப்பட்ட முட்டைகள் இருந்தது. இதை சிறுபாக்கத்தில் இருந்து வாங்கி வந்தது தெரிந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட துணை இயக்குனர்(ஊட்டச்சத்து) அன்பு, கடலூர் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி, மங்களூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் பவானி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேவராஜன் ஆகியோர் நேற்று முன்தினம் நேரில் சென்று சிறுபாக்கம் அங்கன்வாடி மைய உதவியாளர் சாந்தி, பணியாளர் செல்வி, சின்னசேலம் ஓட்டலில் வேலை செய்து வரும் அரவிந்த் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அரவிந்தின் தாயும், அங்கன்வாடி பணியாளருமான செல்வி, உதவியாளராக பணியாற்றி வரும் சாந்தியிடம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் 60 முட்டைகளை வாங்கி, தனது மகன் அரவிந்த் மூலம் ஓட்டலில் வேலை பார்க்கும் சபரி என்பவரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.
2 பெண் ஊழியர்கள் பணியிடை நீக்கம்
இதற்கிடையில் அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. சபரி, அரவிந்த் மற்றும் கடை உரிமையாளர் ஆகியோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அரசு உணவுப்பொருட்களை அத்துமீறி தனிநபர்களுக்கு விற்பனை செய்த காரணத்திற்காகவும், துறை மற்றும் திட்டம் சார்ந்த சேவைகளில் பொறுப்புடன் பணியாற்றாத காரணத்திற்காகவும் சிறுபாக்கம் அங்கன்வாடி மைய உதவியாளர் சாந்தி, அங்கன்வாடி பணியாளர் செல்வி ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.