< Back
மாநில செய்திகள்
கோவையில் ரூ.2.5 லட்சத்திற்கு குழந்தை விற்பனை.. தாய், மகள் உட்பட 5 பேர் கைது
மாநில செய்திகள்

கோவையில் ரூ.2.5 லட்சத்திற்கு குழந்தை விற்பனை.. தாய், மகள் உட்பட 5 பேர் கைது

தினத்தந்தி
|
11 Jun 2024 7:14 AM IST

குழந்தையை ரூ.5 லட்சம் வரை பேரம் பேசி, கடைசியாக ரூ.2.5 லட்சத்துக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவை,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவருடைய மனைவி அஞ்சலி தேவி. இவர்கள் கோவையை அடுத்த சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் ஓட்டல் நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்ததாக மகேஷ்குமார், அஞ்சலி தேவி ஆகியோரை சூலூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், மீட்கப்பட்ட பெண் குழந்தையை விலை கொடுத்து வாங்கியது திம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அஞ்சலி தேவியின் தாயார் பூனம்தேவி(வயது 61) மற்றும் தங்கை மேகா குமாரி(21) ஆகியோருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அவர்கள் பீகாரில் வறுமையில் தவித்த குடும்பத்திடம் இருந்து அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவதாக வாங்கி வந்து ரூ.5 லட்சம் வரை பேரம் பேசி கடைசியாக ரூ.2½ லட்சத்துக்கு விஜயனிடம் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பூனம்தேவி மற்றும் மேகா குமாரியை கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்