< Back
மாநில செய்திகள்
ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

தினத்தந்தி
|
27 Dec 2022 6:45 PM GMT

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்றதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி

புத்தக கண்காட்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட நூலகத்துறை சார்பில் கல்லை புத்தக திருவிழா என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி கள்ளக்குறிச்சியில் உள்ள சென்னை பைபாஸ் திடலில் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 100 புத்தக அரங்குகள் அமைத்து புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

மேலும் பொழுது போக்கு அம்சமாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள், பேச்சரங்கம், பட்டிமன்றம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

புத்தக கண்காட்சி வெற்றி

மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சி வெற்றி பெற்றுள்ளது தமிழக அரசுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். இந்த புத்தக கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டிலான புத்தகங்கங்களை வாங்கிச்சென்றுள்ளனர்.

இந்த வெற்றியால் மீண்டும் அடுத்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தால் எங்களை அழையுங்கள் கலந்து கொள்கிறோம் என புத்தக அச்சகதாரர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனை

இங்கு நடைபெற்ற பெண்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்கள் பரிசோதனை செய்து பயன்பெற்றுள்ளனர். குறிப்பாக புற்றுநோய் மற்றும் மகப்பேறு தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 106 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சியை சிறப்பாக நடத்தி முடித்த அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் வெற்றி சேரும். இந்த புத்தக கண்காட்சியை வெற்றிபெற செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு எனது நன்றியையும், புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

குலுக்கல் முறையில் பரிசு

தொடர்ந்து புத்தக கண்காட்சி நடைபெற சிறப்பாக பணியாற்றிய அனைத்துத்துறை அலுவலர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கு கலெக்டர் கேடயங்கள் வழங்கி பாராட்டினார். மேலும் அதிக அளவில் புத்தகங்கள் வாங்கி குலுக்கல் முறையில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, இணை இயக்குனர்(வேளாண்மை) வேல்விழி, இணை இயக்குனர் (சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பாலச்சந்தர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், கோட்டாட்சியர் பவித்ரா, முதன்மைக்கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட நூலக அலுவலர் பாலசரஸ்வதி, மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி, நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் ராஜ்குமார், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்