ராமநாதபுரம்
மாணவிகளுக்கான தற்காப்பு பயிற்சி
|மாணவிகளுக்கான தற்காப்பு பயிற்சி நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை யூனியனில் தமிழக அரசின் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் படித்து வரும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வட்டாரத்தில் 18 நடுநிலை, 10 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என 28 பள்ளி மாணவிகளுக்கான சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலை பயிற்சி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வகுப்பிற்கு ஒரு மணி நேரம் என மொத்தம் 24 வகுப்புகள் நடத்தப்படுகிறது. பயிற்சியின் முடிவில் மாணவிகளுக்கு பேரிச்சம்பழம் கொண்டைக்கடலை, கடலை மிட்டாய்கள் வழங்கப்பட்டது. இதற்காக ஒரு பள்ளிக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த வட்டாரத்தில்சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தற்காப்பு கலை பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சிகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார மேற்பார்வையாளர் கார்த்திக், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து வருகின்றனர்.