அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு - விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்
|அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
சென்னை,
அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க நாளை மறுநாள்(புதன்கிழமை) கடைசி நாள் ஆகும். ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்கு புதிதாக வீரர்களை தேர்வு செய்ய அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.
இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். முடிவில், அவர்களுக்கு ரூ.10 லட்சம்(வரிப்பிடித்தம் இல்லாமல்) மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இவர்கள் 6 மாதம் பயிற்சி பெறுவார்கள். 3½ ஆண்டுகள் பணியில் இருப்பார்கள் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்டவற்றுக்கு வீரர்கள் தேர்வு செய்யும்பணி நடந்து வருகிறது. அதன்படி, இந்திய விமானப்படைக்கு வீரர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
27.3.2002 முதல் 27.12.2005 வரையிலான இடைப்பட்ட காலத்தில் பிறந்த திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். இந்திய விமானப்படை வரலாற்றில் முதன்முறையாக வீரர்கள் பணிக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உடையவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற அதிகாரப்பூர் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். நாளை மறுநாள்(புதன்கிழமை) விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.