புதுக்கோட்டை
3-ந் தேதி குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சிக்கு வீரர்கள் தேர்வு
|குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சிக்கு வீரர்கள் தேர்வு புதுக்கோட்டையில் 3-ந் தேதி நடக்கிறது.
தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் கேலோ இந்தியா மையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நிறுவப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு குத்துச்சண்டை விளையாட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 30 முதல் 100 மாணவ, மாணவிகளுக்கு 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குத்துச்சண்டை விளையாட்டிற்கான தேர்வு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் வருகிற 3-ந் தேதி காலை 7 மணியளவில் நடைபெறுகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகள் தேர்வு போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டியில் பங்கேற்பவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், பிறப்பு சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ், சான்றளிப்பு கையொப்பத்துடன் சமர்ப்பித்தால் மட்டுமே தேர்வு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தேர்தெடுக்கப்படும் மாணவ- மாணவிகளுக்கு வரும் 5-ந் தேதி முதல் தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்படுவார்கள். மேலும் தகவலுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03498 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.