சென்னை
துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இடம் தேர்வு - அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆய்வு
|துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
குறிப்பாக 56-வது வார்டுக்கு உட்பட்ட முந்தியால்பேட்டை, செயின்ட் சேவியர் தெருவில் சாலையோரம் வசிக்கும் மக்கள், 60-வது வார்டுக்கு உட்பட்ட நாராயண சாரன் தெருவில் சாலையோரம் வசிப்பவர்கள் சுமார் 1,500 குடும்பங்களை மறுகுடியமர்த்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி சாலையோரம் வசிப்பவர்களுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்காக 57-வது வார்டுக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை தண்ணீர் தொட்டி தெருவில் உள்ள மாநகராட்சி பொது பண்டகச் சாலை அமைந்துள்ள இடம், 55-வது வார்டுக்கு உட்பட்ட ஏழு கிணறு பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கிடங்கு அமைந்துள்ள இடம், 60-வது வார்டுக்கு உட்பட்ட பாரிமுனை பிரகாசம் சாலையில் கல்வித்துறை சார்ந்த இடம் ஆகிய இடங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று அலுவலர்களுடன் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அங்கு குடியிருப்புகள் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். 55-வது வார்டு டேவிட்சன் தெருவில் அமைந்துள்ள மண்ணடி காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கு நீரேற்று நிலையம் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் எம்.கோவிந்தராவ், சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி, வடக்கு வட்டார துணை கமிஷனர் எம்.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.