சென்னை
சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.78¾ லட்சம் பறிமுதல்
|சென்டிரல் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.78¾ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பத்மாகர் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஜயவாடாவில் இருந்து சென்னை வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் நடைமேடை 5-ல் வந்து நின்றது. அதில் இருந்து சந்தேகிக்கும் படியான நபர் ஒருவர் இறங்குவதைக் கண்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் அவரின் பையை சோதனை செய்தனர்.
அதில் கட்டுக்கட்டாக பணம் கையிருப்பு தொகையாக வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த நபர் கோவில்பட்டி கடலைக்கார தெருவைச் சேர்ந்த பாலமுரளி (வயது 53) என்பதும், அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.78 லட்சத்து 75 ஆயிரத்து 500-ஐ ரெயிலில் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.