விழுப்புரம்
ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட1 டன் மாம்பழங்கள் பறிமுதல்உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
|ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
விழுப்புரம் பகுதியில் உள்ள மாம்பழம் விற்பனை கடைகள் மற்றும் குடோன்களை நேற்று உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் ராஜரத்தினம், அன்புபழனி, பத்மநாபன், கதிரவன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம்- திருச்சி சாலை, காமராஜர் வீதி, எம்.ஜி.சாலை, கிழக்கு புதுச்சேரி சாலை, கோலியனூர் ஆகிய பகுதிகளில் 15 கடைகள் மற்றும் 3 குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைகளில் ரசாயன கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 1 டன் எடையுள்ள மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை விழுப்புரம் நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் அழித்தனர். மேலும் 5 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கியதுடன், 2 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்தை அபராதமாக விதித்தனர்.
அதோடு மாம்பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டுமென வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, செயற்கை முறையில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.