< Back
மாநில செய்திகள்
பரங்கிப்பேட்டை அருகே  சுருக்குமடி வலையால் பிடிக்கப்பட்ட 1 டன் மீன் பறிமுதல்  படகின் பதிவை ரத்து செய்யவும் நடவடிக்கை
கடலூர்
மாநில செய்திகள்

பரங்கிப்பேட்டை அருகே சுருக்குமடி வலையால் பிடிக்கப்பட்ட 1 டன் மீன் பறிமுதல் படகின் பதிவை ரத்து செய்யவும் நடவடிக்கை

தினத்தந்தி
|
5 July 2022 11:09 PM IST

பரங்கிப்பேட்டை அருகே சுருக்குமடி வலையால் பிடிக்கப்பட்ட 1 டன் மீன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் படகின் பதிவை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை,


சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு தடைவிதித்துள்ளது. மேலும் சுருக்குமடி வலைகள் மூலம் மீன்பிடிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் மீன்துறை ஆய்வாளர் சதுருதீன், சார் ஆய்வாளர் பிரபாகரன், மீன்வள மேற்பார்வையாளர்கள் அறிவு வேந்தன், மயில்வாகனன் மற்றும் கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு காவலர்கள் சாம்பசிவம், அய்யப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி யாரேனும் மீன்பிடிக்கிறார்களா? என நேற்று பரங்கிப்பேட்டை அருகே எம்.ஜி.ஆர். திட்டு கடல் பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

மீன்கள் பறிமுதல்

அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை, எம்.ஜி.ஆர்.திட்டு மீன்பிடி இறங்குதளத்தில் வைத்து மீனவர்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த அதிகாரிகள், சுருக்குமடி வலையால் பிடிக்கப்பட்ட ஒரு டன் மீன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த மீன்களை அதிகாரிகள் பொது ஏலம் விட்டனர். இதில் ஒரு டன் மீன்கள் ரூ.20 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

மேலும் மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட நாட்டுப்படகின் மீது அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து படகின் பதிவை ரத்து செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. படகின் பதிவு ரத்தானால், மீனவர்களுக்கு அரசால் வழங்கப்படும் மானியங்கள் ஏதும் வழங்கப்படாது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்