ஆவடியில் மாநகரப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்
|ஐதராபாத்தில் போதை மாத்திரைகளை மொத்த விலைக்கு வாங்கி சென்னைக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
சென்னை,
சென்னை ஆவடி அருகே கோவில்பதாகை ஜெகஜீவன் ராம் சிலை பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆவடியில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற மாநகரப் பேருந்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதிகாரிகளைக் கண்டதும் பேருந்தின் பின்புறம் அமர்ந்திருந்த 3 பயணிகள் தங்கள் கைகளில் வைத்திருந்த பையை பேருந்திலேயே போட்டுவிட்டு தப்பியோடினர். அந்த பைகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நைட்ரோ விட் எனப்படும் போதை மாத்திரைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
இது குறித்து பறக்கும்படை அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தப்பியோடிய 3 பேரை தீவிரமாக தேடினர். அப்போது அங்குள்ள மைதானத்தின் அருகே முள் புதரில் பதுங்கியிருந்த 2 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐதராபாத்தில் இருந்து மொத்த விலையில் போதை மாத்திரைகளை வாங்கி சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்வதற்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இவர்கள் யாரிடம் மாத்திரைகளை விற்பனை செய்ய இருந்தார்கள் என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.