திருப்பத்தூர்
100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
|ஜோலார்பேட்டையில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் நகராட்சி அறிவிப்பை மீறி வணிகர்கள் தங்களின் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்தது.
அதன்பேரில் நேற்று நகராட்சி ஆணையாளர் பழனி, நகராட்சி பொறியாளர் கோபு மற்றும் அதிகாரிகள் இடையம்பட்டி, பார்த்தசாரதி தெரு பகுதியில் உள்ள கடையிலும், பார்சம்பேட்டை அருகில் உள்ள கடையிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 2 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ஒவ்வொரு கடையிலும் 50 கிலோ வீதம் 2 கடையில் சேர்த்து மொத்தம் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.