'சீமான் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' - திருமாவளவன்
|சீமானின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், சீமானின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய திருமாவளவன், "மொழி உணர்வு, இன உணர்வு வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்தியா முழுவதும் சிறுபான்மையினருக்கு முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற உணர்வு மட்டுமே பாதுகாப்பைத் தரக்கூடியது. அந்த உணர்வை சிதைக்க வேண்டும் என்பது தான் சங்பரிவார், பா.ஜ.க.வின் நோக்கம். அதே கருத்தை சீமான் போன்றவர்களும் முன்மொழிவது அதிர்ச்சியைத் தருகிறது. சீமான் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.