< Back
மாநில செய்திகள்
11 ஆண்டுகளுக்கு பிறகு ரெயிலை பார்ப்பது நெகிழ்ச்சி  தேனி மாவட்ட மக்கள் கருத்து
தேனி
மாநில செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு ரெயிலை பார்ப்பது நெகிழ்ச்சி தேனி மாவட்ட மக்கள் கருத்து

தினத்தந்தி
|
26 May 2022 11:20 PM IST

தேனியில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ரெயிலை பார்ப்பது நெகிழ்ச்சியாக இருப்பதாக தேனி மாவட்ட மக்கள் கூறினர்.


ரெயில் சேவை

போடி-மதுரை அகல ரெயில் பாதை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், தேனி வரை பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து மதுரையில் இருந்து தேனிக்கு ரெயில் சேவை தொடக்க விழா இன்று நடந்தது. சென்னையில் நடந்த பிரமாண்ட விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி இந்த ரெயில் சேவையை காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

11 ஆண்டுகளுக்கு பிறகு தேனிக்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டதால், தேனி மாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், ப.ரவீந்திரநாத் எம்.பி.க்கும் தேனி பொதுமக்கள், வணிகர்கள் நன்றி தெரிவித்தனர். தேனிக்கு வந்த ரெயிலுக்கு திரளானவர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

நெகிழ்ச்சி

இதுகுறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

கே.எஸ்.கே.நடேசன் (தேனி மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர்) :- நான் சிறுவனாக இருந்ததில் இருந்து தேனியில் இருந்து மதுரைக்கு ரெயிலில் சென்று வந்துள்ளேன். கடந்த 11 ஆண்டுகளாக ரெயில் இல்லாதது, எதையோ இழந்தது போல் இருந்தது. போடி-மதுரை ரெயில் பாதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தேனி மாவட்டத்தில் விளையும் விளை பொருட்களை ஏற்றுமதி செய்யவும், பிறமாநிலங்களில் இருந்து பருப்பு வகைகள், பஞ்சு, எண்ணெய் வித்துகள் போன்ற சரக்குகளை கொண்டு வருவதற்கும் இந்த ரெயில் அத்தியாவசிய தேவை. ரெயில் சேவை இல்லாததால் வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் பாதிக்கப்பட்டனர். இப்போது மீண்டும் ரெயில் சேவை இயக்கப்பட்டுள்ளதால், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மிகவும் பயன் அளிக்கும். சரக்கு போக்குவரத்து செலவு வெகுவாக குறையும். இந்த திட்டப் பணிகளை சாத்தியப்படுத்தி ரெயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். அவருக்கு இந்த நேரத்தில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேனியில் மீண்டும் ரெயிலை பார்த்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

குறைவான கட்டணம்

ஆனந்தி (குடும்பத்தலைவி, ஆண்டிப்பட்டி) :- 11 ஆண்டுகளுக்கு பிறகு தேனிக்கு ரெயில் சேவை தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் ரெயில் வருமா? வராதா? என்ற கேள்விகளுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காத்திருந்தோம். தற்போது ரெயில் சேவை தொடங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ரெயிலில் ஆண்டிப்பட்டியில் இருந்து மதுரை செல்வதற்கு ரூ.30 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பஸ்களில் ரூ.45 கட்டணம் என்பதால், ரெயில் சேவை அனைத்து தரப்பினருக்கும் பயன்படும். தற்போது தினமும் ஒரு முறை மட்டுமே தேனிக்கு ரெயில் வந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் எண்ணிக்கையில் பயணத்தை அதிகரிக்க வேண்டும்.

நந்தினி (குடும்பத்தலைவி, தேனி) :- ரெயில் போக்குவரத்து இல்லாத மாவட்டம் என்று தேனி மாவட்டம் சுமந்து வந்த 11 ஆண்டு கால விமர்சனம் இப்போது மாறிவிட்டது. தேனியில் ரெயில் சத்தம் இசை சத்தமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. அந்த அளவுக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. இனிமேல் தேனிக்கும் தினமும் ரெயில் வந்து செல்லும். மீண்டும் தேனியில் ரெயில் சத்தத்தை கேட்கவும், ரெயிலை பார்க்கவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேனியில் இருந்து சென்னை, கோவை, நாகர்கோவில், ராமேசுவரம் போன்ற பகுதிகளுக்கும் ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்