< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் விதைகள் வழங்கப்படும்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் விதைகள் வழங்கப்படும்

தினத்தந்தி
|
10 July 2022 12:01 AM IST

காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் விதைகள் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திருக்கடையூர்:

காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் விதைகள் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

முழு மானியத்துடன் விதைகள்

செம்பனார்கோவில் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-செம்பனார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காய்கறி, பழம், பூ போன்றவைகளை பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை துறையின் மூலம் முழு மானியத்துடன் காய்கறி விதைகள் மற்றும் குழித்தட்டு முறை நாற்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சொட்டு நீர் பாசன வசதிகள்

மா, முந்திரி போன்ற பல்லாண்டு பயிர்கள் பயிரிடும் விவசாயிகள் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் குறைந்த நீரை பயன்படுத்தி அதிக மகசூலை பெற சொட்டு நீர் பாசன வசதிகள் அமைத்து பயன்பெற அழைக்கப்படுகிறார்கள். மேலும் சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியம் மற்றும் இதர விவசாயிகள் 75 சதவீதம் மானியத்தின் மூலம் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின்படி ஆயில் என்ஜின், எலக்ட்ரிக் மோட்டார் வாங்குவதற்கு ரூ.15 ஆயிரம் மற்றும் பி.வி.சி. பைப் வாங்குவதற்கு ரூ.10 ஆயிரம் மற்றும் தண்ணீர் சேகரிக்கும் தொட்டி அமைப்பதற்கு ரூ.40 ஆயிரம் என இவை அனைத்தும் 50 சதவீத பின்னேர்ப்பு மானியத்தில் வழங்கப்படுகிறது.

ஊக்கத்தொகை

காய்கறி பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் விதம் 2½ ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். எனவே தோட்டக்கலை துறையின் மூலம் வழங்கப்படும் இடுபொருளை பெற்று சாகுபடி செய்து உழவர் சந்தையில் விற்பனை செய்து பயனடையுங்கள்.

இதனை பெற உரிய சிட்டா அடங்கல், ஆதார் அட்டை குடும்ப அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்