தஞ்சாவூர்
மானிய விலையில் விதை நிலக்கடலையை அரசே வழங்க வேண்டும்
|மானிய விலையில் விதை நிலக்கடலையை அரசே வழங்க வேண்டும்
மானிய விலையில் விதை நிலக்கடலையை அரசே வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி கோரிக்கை விடுத்தார்.
குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்றுகாலை நடந்தது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
பனை விதைகள்
ஒரத்தூர் பிரகலாதன்: வெண்ணாற்றில் பூதலூர் அருகே ஒரத்தூருக்கு கிழக்கே தூர் வாரப்படாமல் உள்ளதால், ஆறு மிக மோசமாக உள்ளது. இதை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்பலாபட்டு தங்கவேல்: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆவணங்கள் சரியில்லை எனக் கூறி நிதி வழங்கவில்லை. இப்போது ஆவணங்கள் சரியாக இருந்தும் கிடைக்கவில்லை.
புலவன்காடு மாரியப்பன்: வயல் வரப்புகளில் பனை விதைகளை விதைக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு பனை விதைகளை வழங்குகிறார்கள். எங்களால் அது முடியாது. கிராமப்பகுதியில் உள்ள ஏரி, குளம், ஆற்றங்கரைகளில் பனை விதைகளை விதைத்தால் மண் அரிப்பை தடுக்கலாம்.
உரத்தட்டுப்பாடு
தோழகிரிப்பட்டி கோவிந்தராசு: குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையை முன்கூட்டியே வருகிற 23-ந் தேதியே திறக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.
கக்கரை சுகுமாரன்: உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்துக்கான நிதியை மத்திய அரசுக் குறைத்துவிட்டது. கடந்த ஆண்டு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டு ரூ.16 ஆயிரம் கோடியாக குறைத்துவிட்டது. இதற்கான நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்தால் தான் விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும்.
நிலக்கடலை
சிவவிடுதி ராமசாமி: காடுவெட்டி விடுதி, சிவவிடுதி பகுதிகளில் 50 ஏக்கர் நிலம் நிலக்கடலை சாகுபடிக்கு தயாராக உள்ளது. தனியாரிடம் 37 கிலோ விதை நிலக்கடலை ரூ.4,500-க்கு விற்கப்படுகிறது. இவ்வளவு தொகை கொடுத்து வாங்க முடியுமா? எனவே அரசே மானிய விலையில் விதை நிலக்கடலை வழங்க வேண்டும். முறையாக கடனை திருப்பி செலுத்தியும் வங்கிகளில் பயிர்க்கடன் தர மறுக்கிறார்கள்.
வடகால் சக்திவேல்: குரங்குகள் தொல்லை தாங்க முடியவில்லை. எனவே குரங்குகளை பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.