பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்தி ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
|ஆந்திர ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
ஆந்திராவில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
விஜயநகர மாவட்டம், கண்டகப்பள்ளி ரெயில் நிலைய பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயில் மீது அவ்வழித்தடத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஒடிசாவைத் தொடர்ந்து ஆந்திராவில் தற்போது நடைபெற்றுள்ள இந்த விபத்தினால் ரெயிலில் பயணம் மேற்கொள்வோர் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய அரசும், ரெயில்வே துறையும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்தி ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.