உயிரிழந்த ராஜசேகர் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
|உயிரிழந்த ராஜசேகர் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
போலீஸ் காவலில் மரணமடைந்த விசாரணைக் கைதி ராஜசேகர் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கவும் பிரேத பரிசோதனை அறிக்கையை விரைந்து வழங்கவும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அப்பு என்ற ராஜசேகர் (வயது 31) என்பவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த நிலையில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை தரப்படவில்லை என்று ராஜசேகர் குடும்பத்தினர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து ராஜசேகரின் தாய் உஷா ராணி உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை சென்னையில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கும்படியும் தேவையான பாதுகாப்பு வழங்கவும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மேலும் ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கையை விரைவில் வழங்கவும் காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.