"திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்" - விசிக டிஜிபி அலுவலகத்தில் மனு
|திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அக்டோபர் 2-ந்தேதி நடத்த இருந்த ஊர்வலத்துக்கு தடை விதித்து நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் திருமாவளவனின் மனிதசங்கிலி போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிக்க என கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊர்வலம் காரணமாக தான் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மறுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் திருமாவளவனுக்கு ஏராளமான மிரட்டல்கள் வருவதாக கூறப்பட்டுள்ளது.
எனவே திருமாவளனுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்தக்கோரி விசிக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பார்த்திபன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார். 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் மனுவில் கூறியுள்ளார்.