தேனி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த காவலாளி பலி
|சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த காவலாளி பலியானார்.
போடி அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர், போடியில் உள்ள தனியார் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 21-ந்தேதி இவர், வேலை முடிந்து மாலையில் தம்மிநாயக்கன்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். போடி அருகே கோணாம்பட்டி சாலையில் தண்ணீர்தொட்டி அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.
அப்போது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க, அவர் திடீர் பிரேக் போட்டார். இதில் நிலைதடுமாறிய பிரபு, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பிரபு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.