பாதுகாப்பையும், சட்டப்படியான உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் -திருமாவளவன் வலியுறுத்தல்
|தமிழ்நாடு அரசு வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் பாதுகாப்பையும், சட்டப்படியான உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை,
'பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார்கள்' என்கிற பொய்யான செய்தியை வேண்டும் என்றே சமூக ஊடகங்களின் மூலமாக பரப்பி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
இது திட்டமிட்ட பயங்கரவாத சதி என்பதால் இதன் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை மேற்கொள்வது, இன்னொருபுறம் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரை படுகொலை செய்கிறார்கள் என்று வதந்தி பரப்புவது என இரண்டு வகையில் சனாதன சக்திகள் இந்த சதிவேலையில் ஈடுபட்டிருக்கின்றன. எனவே, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சார்ந்த கூலித்தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாட்டில் செய்யப்படும் அவதூறு பிரசாரங்களை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
உறுதிப்படுத்த வேண்டும்
மாநிலம் விட்டு மாநிலம் சென்று பிழைக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக 1979-ம் ஆண்டு 'மாநிலங்களுக்கிடையே புலம்பெயரும் தொழிலாளர் சட்டம்' இயற்றப்பட்டது.
வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்ததாரர்கள் மாநில அரசிடம் உரிமம் பெற வேண்டும். அவர்கள் அழைத்துவரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி அவர்களுக்கு நியாயமான கூலி மற்றும் சுகாதார வசதிகளையும், அந்த தொழிலாளர்களது குழந்தைகளுக்கு கல்வி வசதியையும் அந்த ஒப்பந்ததாரர் செய்துதர வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, சட்டப்படி அவர்களுக்கு உள்ள பிற உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.