திருநெல்வேலி
இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; சங்க கூட்டத்தில் தீர்மானம்
|இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு அங்கீகாரம் பெற்ற ஆசிரிய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் கணேசன், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில பொது செயலாளர் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஜார்ஜ் இனிகோ வரவேற்றார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் கயத்தாறு கணேசன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் கென்னடி, அகில இந்திய ஆசிரியர் பேரவை விக்டர், ஆசிரியர் மன்றம் மரிய ஜோசப் லாரன்ஸ் உள்பட பலர் பேசினர். இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் பணியாற்றிய தொகுப்பூதிய காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை உடனே மாநில அரசு வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பி.எட். பயிற்சி மாணவர்களை கொண்டு, எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதிப்பீடு செய்யும் முறையை கைவிட வேண்டும். காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பாஸ்கர சேதுபதி நன்றி கூறினார்.