அண்ணாமலையின் 2-ஆம் கட்ட நடைபயணம்: ஆலங்குளத்தில் இன்று தொடக்கம்
|நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்தும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
தென்காசி,
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்தும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி அண்ணாமலை பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். முதல் கட்ட பயணத்தில் மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார். இதில் 7 பாராளுமன்ற தொகுதிகளும் அடங்கும். கடந்த 22-ந்தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை தனது முதல் கட்ட யாத்திரையை நிறைவு செய்தார்.
இந்த நிலையில், அண்ணாமலை தனது 2-ம் கட்ட நடைபயணத்தை இன்று மாலை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடிக்கு அண்ணாமலை வந்தார். அங்கிருந்து காரில் நெல்லைக்கு புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தனது 2-வது கட்ட நடைபயணத்தை தொடங்குகிறார்.
அதன்படி மாலை 3 மணிக்கு பொட்டல்புதூரில் தொடங்கி 5 மணிக்கு கடையம் பஸ் நிலையத்தில் நடைபயணத்தை முடிக்கிறார்.தொடர்ந்து தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலியூரில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 8 மணிக்கு வந்தடைகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கடையநல்லூரில் தொடங்கி கிருஷ்ணாபுரம் வரை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியங்குடி எலுமிச்சை சந்தையில் தொடங்கி சிந்தாமணி வரையிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். அண்ணாமலையின் 2-ம் கட்ட நடைபயணத்தையொட்டி தென்காசி மாவட்ட பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.