மரக்காணத்தில் திடீர் கடல் சீற்றத்தால் குடியிருப்புகளில் கடல்நீர் புகுந்தது; 20 படகுகள் சேதம்; மீனவர்கள் அதிர்ச்சி
|மரக்காணத்தில் திடீர் கடல் சீற்றத்தால் ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்ததால் 20 படகுகள் சேதம் அடைந்தன. குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் மீனவர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
19 மீனவ கிராமங்கள்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு, கட்டு மரம் மூலம் கடலுக்கு மீன் பிடித்து வருகிறார்கள். தற்போது இனப்பெருக்கத்திற்காக ஆழ்கடலுக்கு சென்று விடுவதால் மீனவர்களின் வலையில் குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைக்கின்றன.
கோடைகாலம் நிறைவுக்கு வரும் இந்த நேரத்தில் கடல் அலைகளின் சீற்றம் குறைந்து கடல் வழக்கத்திற்கு மாறாக அமைதியான சூழலில் இருக்கும். மழைக்காலம் தொடங்கும் போது தான் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படும். அப்போது கடல் அலை பல அடி தூரத்திற்கு எழும்பி மீனவர்கள் வசிக்கும் கரையோர குடியிருப்புகளை நோக்கி வரும். அந்த நேரத்தில் மீனவர்கள் தங்களது படகு, வலைகளை, மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்வது வழக்கம்.
திடீர் கடல் சீற்றம்
இந்தநிலையில் கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் மற்றும் மாறுபட்ட நீரோட்டம் போன்ற காரணத்தால் மரக்காணம் பகுதியில் நேற்று காலையில் இருந்து வழக்கத்திற்கு மாறாக கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது். கடலில் இருந்து சுமார் 20 அடி உயரத்துக்கு சீறிப்பாய்ந்து கரையை தாக்கியது. இதனால் கடற்கரையோரம் இருந்த மீனவ குடியிருப்புகளில் கடல்நீர் புகுந்தது. குறிப்பாக கூனிமேடுகுப்பம், அனிச்சங்குப்பம், கைப்பானிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் வலைகளை பாதுகாக்கும் இடங்கள், படகுகளை நிறுத்தி வைக்கும் இடங்கள் மற்றும் குடியிருப்புகளில் கடல்நீர் புகுந்துள்ளது.
மீனவர்கள் அதிர்ச்சி
திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் எழுந்த ராட்சத அலைகளின் தாக்குதலை எதிர்பார்க்காத மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கடற்கரையோரத்தில் நிறுத்தி இருந்த தங்களது படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்திற்கு அவசர அவசரமாக எடுத்துச் சென்றனர்.
அனிச்சங்குப்பம் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட இந்த கடல் சீற்றம் காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 90-க்கும் மேற்பட்ட படகுகளில் 20 படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. மரக்காணம் பகுதியில் கடலோர கிராமங்களில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் அறிந்து மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் விரைந்து சென்று மீனவ கிராமங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உபகரணங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு மீனவர்களை அறிவுறுத்தினர்.