திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது - காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி
|திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது.
காங்கிரஸ் தரப்பில் அக்கட்சி நியமித்துள்ள தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித், தமிழ்நாட்டு பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோருடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, செல்வபெருந்தகை உள்ளிட்டோர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்றனர்.
திமுக தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திருச்சி சிவா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருந்தது. தொகுதி பங்கீடு தொடர்பாக மேற்கொண்டு பேசவேண்டிய விஷயங்களை வெகுவிரைவில் பேசுவோம்.
எத்தனை இடங்கள் கேட்டோம் என்பது எங்களுக்கும் (காங்கிரஸ்), திமுகவுக்கும் இடையேயான பேச்சு. அதை வெளியில் கூறுவதில்லை என்று இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டு முடிவுக்கு வந்துள்ளோம்.
முதற்கட்ட பேச்சுவார்த்தையில் 40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றிபெறுவது?, எவ்வாறு வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது? எந்தவிதமான தேர்தல் பரப்புரையை செய்வது? பாஜகவை எவ்வாறு எதிர்கொள்வது? , அதிமுகவை எவ்வாறு எதிர்கொள்வது? நம்மோடு உள்ள கூட்டணி கட்சிகளை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது? என்பதை பற்றி பேசினோம். திமுகவிடம் தொகுதி பட்டியல் எதையும் காங்கிரஸ் கொடுக்கவில்லை' என்றார்.