பள்ளிகளில் பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
|வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள சூழலில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள சூழலில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் பள்ளி பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் விடுமுறைநாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிக்க அனுமதிக்கக்கூடாது என பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.
தொடர் மழையால் பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவர் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்த சுற்றுச்சுவர் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
மழையால் பள்ளியின் சில வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டு இருப்பின் அவற்றை பயன்படுத்தாமல் பூட்டி வைப்பது அவசியம். அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, மின் கசிவு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவை மூடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். பருவகால நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும். பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு இடிக்க வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை முதன்மை, மாவட்டக்கல்வி அலுவலர்கள் பள்ளிப் பார்வையின்போது கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.