கன்னியாகுமரி
புலியை பிடிக்க டிரோன் கேமரா மூலம் தேடும் பணி
|பேச்சிப்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிக்க டிரோன் கேமரா மூலம் தேடும் பணி நடைபெற உள்ளதாக மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறினார்.
குலசேகரம்,
பேச்சிப்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிக்க டிரோன் கேமரா மூலம் தேடும் பணி நடைபெற உள்ளதாக மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறினார்.
அட்டகாசம் செய்யும் புலி
பேச்சிப்பாறை அருகே உள்ள சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் கடந்த 3-ந் தேதி முதல் ஒரு புலி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த புலி தொழிலாளர்களுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை அடித்து வேட்டையாடி வருவதால் அவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். புலியைப் பிடிக்க வனத்துறையினர் பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் புலி இதுவரை சிக்கவில்லை.
இதனால் வனத்துறைக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் மக்களும் நிம்மதியாக குடியிருப்புப் பகுதிகளில் நடமாட முடியவில்லை. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியே வரமுடியவில்லை.
டிேரான் கேமரா
இந்தநிலையில் புலியின் இருப்பிடத்தை கண்டறிய அதிநவீன டிரோன் கேமரா மூலம் வனப்பகுதிகளில் தேடும் பணி இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
இதுகுறித்து நேற்று மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறியதாவது:-
சிற்றாறு குடியிருப்பு மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் ஆடு, மாடுகளை அடித்து வரும் புலியைப் பிடிக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அது வயதான புலியாக இருக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது.
அதே வேளையில் புலியைப் பிடித்து அப்புறத்தப்படுத்த அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று வருகிறோம். ஏற்கனவே 2 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், எலைட் படை, மயக்க ஊசி டாக்டர்கள் குழுக்கள் தீவிரமாக தேடுதலில் உள்ளன.
நகர்வுகள் இல்லை
அத்துடன் களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலயத்தில் இருந்து வன உயிரியலாளர் வந்துள்ளார். இவர் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து புலியின் நகர்வு எந்தப்பக்கம் உள்ளது என்று கூறுவார். அதே வேளையில் கடந்த 5 நாட்களாக புலியின் நகர்வுகள் இல்லாமல் உள்ளது. எனினும் அடுத்த கட்ட முயற்சியாக நாளை (அதாவது இன்று) முதல் அதிநவீன டிரோன் கேமரா மூலம் புலி காட்டுக்குள் நடமாடும் இடத்தை கண்டு பிடிக்கும் பணிகளை தொடங்கவுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.