< Back
மாநில செய்திகள்
நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த என்ஜினீயர்; 100 அடி பள்ளத்தில் இறங்கி தேடிய தீயணைப்பு படைவீரர்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த என்ஜினீயர்; 100 அடி பள்ளத்தில் இறங்கி தேடிய தீயணைப்பு படைவீரர்கள்

தினத்தந்தி
|
6 Aug 2022 11:09 PM IST

பெரும்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறிவிழுந்த என்ஜினீயரை 100 அடி பள்ளத்தில் இறங்கி தீயணைப்பு படைவீரர்கள் தேடி பார்த்தனர்.

பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த 3-ந்தேதி என்ஜினீயரான அஜய்பாண்டியன் (வயது 28) என்பவர் புகைப்படம் எடுக்க முயன்றார். பாறையில் நின்ற அவரை, உடன் வந்த நண்பர் கல்யாணசுந்தரம் என்பவர் செல்போனில் புகைப்படம் எடுத்தார். அப்போது திடீரென்று அஜய்பாண்டியன் நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்தார். இதில், அவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீசார் மற்றும் ஆத்தூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அஜய்பாண்டியனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 நாட்களாக அவரை தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் இன்று 4-வது நாளாக அஜய்பாண்டியனை தேடும் பணி நடைபெற்றது. ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் புனிதராஜ், அழகேசன், திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராசு, ஒட்டன்சத்திரம் நிலைய அலுவலர் ராஜேந்திரன் உள்பட 26 பேர், 3 குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு குழுவினர் புல்லாவெளி நீர்வீழ்ச்சி அருகே 100 அடி பள்ளத்தில் கயிறு கட்டி இறங்கி தேடினர். ஆனால் காட்டாற்றில் நீர்வரத்து அதிக அளவில் இருப்பதால் தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று மாலை வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதற்கிடையே திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், ஆத்தூர் தாசில்தார் சரவணன், தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன், கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா செல்வகுமார் ஆகியோர் தேடும் பணியை பார்வையிட்டனர்.


Related Tags :
மேலும் செய்திகள்