நாமக்கல்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்பதால்'லியோ' படத்திற்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்
|நடிகர் விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவார் என்பதால், ‘லியோ’ படத்திற்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக நாமக்கல்லில் சீமான் குற்றம்சாட்டினார்.
சீமான் பேட்டி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நாமக்கல் வந்தார். இங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதையடுத்து சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் கட்சி ஆரம்பித்து 13 ஆண்டுகள் ஆகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில், யாருடனும் கூட்டணி கிடையாது. மக்களை நம்பி தான் நான் இருக்கிறேன். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். வெற்றி பெறுவோம். கல்வி, மருத்துவம், தண்ணீர் என எல்லாற்றையும் விற்றுவிட்ட நிலையில், தற்போது குழந்தைகளை விற்று வருகின்றனர். மூளைச்சாவு என்ற நோயை உருவாக்கி, மனிதனின் உடல் உறுப்புகளை விற்கின்றனர்.
ஒழுகும் பள்ளிகளை சீரமைக்க முடியாத அரசு, பல கோடி ரூபாய் செலவு செய்து சமாதி கட்டுகிறது. தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை, 100 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் எனக் கூறி வருகிறார். ஆனால் ஆசிரியர்கள், செவிலியர்கள் எதற்காக போராட்டம் நடத்துகின்றனர?். மகளிர் உரிமை தொகைக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி தமிழக அரசு செலவு செய்கிறது. யாருடைய பணத்தை செலவு செய்கிறார்கள்?. 60 ஆண்டுகளாக, திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன.
'லியோ' திரைப்படம்
'ஜெயிலர்' திரைப்படத்திற்கு எந்தவித இடையூறும் வரவில்லை. நடிகர் விஜய் நடித்த 'லியோ' படத்திற்கு, இசை வெளியீட்டு விழாவில் இருந்தே பிரச்சினை தான். காரணம், நடிகர் விஜய் கட்சி தொடங்கி, அரசியலுக்கு வருவார் என்பதால் தான் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். அவர் நடிப்பதை நிறுத்தி விட்டால் என்ன செய்யமுடியும். தேவையில்லாமல் நடிகர் விஜயை சீண்டி விட்டீர்கள்.
தமிழகத்தை 60 ஆண்டுகாலமாக திராவிட கட்சிகள் ஆண்டு விட்டன. வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும். முகலாய, சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யமுமே அழிந்து போனது. அதேபோல், திராவிட கட்சிகளும் அழியும். திராவிட கட்சிகளை அழிப்போம். நாங்கள் வளர்ந்தாலே திராவிடம் வீழ்ந்து விடும்.
விளைநிலங்களை கையகப்படுத்தி 'சிப்காட்' அமைப்பதால், பெரு நிறுவனங்கள், பெரு முதலாளிகள் மட்டுமே லாபம் பெறுவார்கள். விளையாத நிலங்கள் என்று எதுவுமே இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகளுக்கான நாடாக மாறி விட்டது. மக்களை இந்த மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றி, காதில் தேன் ஊற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுக்கூட்டம்
முன்னதாக அவர் நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேடு பகுதியில் கட்சி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்திலும், இரவில் நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலை என்கிற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்திலும் சீமான் பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் மண்டல செயலாளர் பாஸ்கர், மாநில நிர்வாகிகள் ஜெகதீச பாண்டியன், யுவராணி, அரவிந்த், மணிகண்டன், மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜன், மாவட்ட தலைவர் பொன் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.