தஞ்சாவூர்
சீமான் பேட்டி
|லியோ பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது என கும்பகோணத்தில், சீமான் கூறினார்.
லியோ பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது என கும்பகோணத்தில், சீமான் கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், திருவையாறு ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் வக்கீல் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாமிநாதன், தலைவர் அசோக், பொருளாளர் அருண்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வக்கீல் மணி செந்தில், கல்வியாளர் ஹுமாயின் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
சி.பா. ஆதித்தனார் உருவப்படத்துக்கு மரியாதை
முன்னதாக கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் உள்ள ராயா மஹால் திருமண மண்டபத்தில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆதித்தனாரின் உருவப்படத்துக்கு சீமான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி முறிந்ததற்கு என்ன காரணம் என்பதை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தெரிவித்தால்தான் பதில் சொல்ல முடியும்.
ஒட்டுக்காக முன்கூட்டியே பணம்
துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இவற்றுக்கெல்லாம் அரசிடம் நிதி இல்லை. குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்க மட்டும் அரசிடம் எப்படி நிதி உள்ளது. பெண்களின் ஓட்டை பறிப்பதற்கு செய்யப்பட்ட சூழ்ச்சி தான் இது. ஓட்டுக்காக முன்கூட்டியே அரசு பெண்களுக்கு பணம் கொடுத்து வருகிறது. இது ஏமாற்று வேலை.
தமிழக மக்களுக்காக காவிரியில் நீர் வழங்க வலியுறுத்திய தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்து வரும் செயல்கள் கண்டிக்கத்தக்கது.
அனுமதி மறுப்பு
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சீமான் மீது 10 வருடங்களுக்கு முன்பு எந்தவித வழக்கும் தொடுத்தது கிடையாது. சீமான் வளர்ந்து விட்டான் அவனை நம்பி ஏராளமான மக்கள், இளைஞர்கள் செல்கின்றனர் என்பதால் அரசுக்கு பயம் வருகிறது. தற்போது நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வருவதால் நாம் தமிழர் கட்சிக்கு வலிமை தான்.
இவ்வாறு அவர் கூறினார்.